இறைவனை சிந்திக்காதவர்கள்

இறைவனை சிந்திக்காதவர்கள் இன்னும் அவர்கள் (சிந்தித்து) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில்(பல்வேறு) விளக்கங்களைகூறியுள்ளோம். (அல்குர்ஆன் 17:41)

Monday, February 28, 2011

அல்லாஹ் உருவமற்றவனா?


                                              -ஓர் ஆய்வு

 

       தொடர் - 2:

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....


இறைவனுக்கு இரு கைகள்:

எல்லாம் வல்ல அல்லாஹ் தனக்கு இரு கைகள் இருப்பதைத் திருக்குர்ஆனில் தெரிவிக்கிறான்.
"எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' என்று (இறைவன்) கேட்டான்.
அல்குர்ஆன் 38:75


அல்லாஹ்வுக்குக் கைகள் இருப்பதைத் தெரிவிக்கும் வசனமாகும். இப்போது இது குறித்த ஹதீஸ்களைப் பார்ப்போம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் மறுமை நாüல் மக்கüன் தலைவன் ஆவேன். (மறுமை நாüல்) அல்லாஹ் (மக்கüல்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெüயில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களைப் பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியேற்பார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), "நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்) பார்க்க மாட்டீர்களா?'' என்று கேட்பார்கள். மக்கள் சிலர், "உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)'' என்று கூறுவார்கள்.
ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்கüடம் சென்று, "ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும் படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். உங்களைச் சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கவில்லையா?'' என்று கேட்பார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3340
இது ஆதம் நபியிடம் மக்கள் கூறுகின்ற கருத்தாகும். இதில், அல்லாஹ் தன் கையால் உங்களைப் படைத்தான் என்று மக்கள் கூறுவதிலிருந்து இறைவனுக்குக் கைகள் இருப்பதை அறிய முடியும்.

 

மூஸாவை வென்ற ஆதம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தம் இறைவன் அருகில் தர்க்கம் செய்தார்கள். அப்போது மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள். மூசா (அலை) அவர்கள், "அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்து, உங்களுக்குள் தனது உயிரை ஊதி, தன் வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்து, உங்களைச் சொர்க்கத்தில் குடியிருக்கச் செய்த ஆதம் நீங்கள் தானே! பிறகு நீங்கள் உங்களது பாவத்தின் மூலம் (உங்கள் வழித் தோன்றல்களான) மனிதர்களை பூமிக்கு இறங்கச் செய்து விட்டீர்கள்'' என்று கூறினார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "அல்லாஹ் தன் தூதுத்துவச் செய்திகளைத் தெரிவிக்கவும் தன்னிடம் உரையாடவும் உம்மைத் தேர்ந்தெடுத்து, அனைத்துப் பொருட்களைப் பற்றிய விளக்கமும் உள்ள பலகைகளை உமக்கு வழங்கி, தன் அருகில் வரச்செய்து இரகசியமாக உரையாடிய மூசா நீர் தானே! நான் படைக்கப்படுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் தவ்ராத்தை எழுதியதாக நீர் கண்டீர்?'' என்று கேட்டார்கள்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், "நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால்'' என்று பதிலளித்தார்கள். "அதில், ஆதம் தம் இறைவனுக்கு மாறு செய்தார். எனவே, அவர் வழி தவறினார் என்று எழுதப்பட்டிருந்ததா?'' என்று கேட்டார்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், "ஆம்' என்றார்கள். "அவ்வாறாயின், என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே எதை நான் செய்வேன் என்று இறைவன் என்மீது விதியாக்கி விட்டடானோ அதைச் செய்ததற்காக என்னை நீங்கள் பழிக்கிறீரா?'' என்று ஆதம் (அலை) அவர்கள் கேட்டார்கள்.
(இந்தக் கேள்வியின் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4795
இந்த ஹதீஸில் மூஸா (அலை) அவர்கள், ஆதம் நபியைப் பார்த்து, அல்லாஹ் தன் கையினால் உங்களைப் படைத்தான் என்று சிறப்பித்துக் கூறுவதைப் பார்க்கிறோம்.

பாக்கியமிக்க இரு கைகள்:

   

அல்லாஹ், ஆதமைப் படைத்து அவரிடம் உயிரை ஊதினான். அவர் உடனே தும்மி, "அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறி, அவனது அனுமதியுடன் அல்லாஹ்வைப் புகழ்ந்தார். அவரிடம் அவரது இறைவன், "ஆதமே! யர்ஹமுக்கல்லாஹ் - அல்லாஹ் உமக்கு அருள் புரிவானாக! இதோ அமர்ந்திருக்கின்ற இந்த மலக்குகளின் கூட்டத்திடம் சென்று அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வீராக!' என்று கூறினான். (அவ்வாறு அவர் கூறியதும் அம்மலக்குகள்) பதிலளித்தனர். பின்னர் அவர் தன்னுடைய இறைவனிடம் திரும்பியதும், "இது உம்முடைய முகமனும், உமது பிள்ளைகள் தங்களுக்கிடையில் (பரிமாறுகின்ற) முகமனும் ஆகும்'' என்று இறைவன் கூறினான்.

பிறகு தன்னுடைய இரு கைகளும் பொத்தப்பட்டிருக்கும் நிலையில், "இவ்விரண்டில் நீர் விரும்பிய எதை வேண்டுமானாலும் தேர்வு செய்க'' என்று கூறினான். "நான் என்னுடைய இறைவனின் வலது கையைத் தேர்வு செய்தேன். எனினும் என்னுடைய இறைவனின் இரு கைகளுமே பாக்கியமாக்கப்பட்ட வலது கை தான்'' என்று ஆதம் கூறினார். பிறகு அதை அல்லாஹ் விரித்தான். அதில் ஆதமும் அவரது சந்ததியினரும் இருந்தனர். 
"என்னுடைய இறைவா! இவர்கள் யார்?'' என்று ஆதம் கேட்டார். "இவர் உன்னுடைய மகன் தாவூத்! அவருக்கு வயது நாற்பதாக எழுதியிருக்கிறேன்'' என்று பதிலளித்தான். "இறைவா! அவருக்கு வயதை அதிகமாக்கு!'' என்று கேட்டார். "நான் அவருக்கு எழுதியது அது தான்'' என்று பதில் சொன்னான். "என்னுடைய இறைவா! அவருக்கு என்னுடைய வயதிலிருந்து அறுபதை வழங்குகிறேன்'' என்றார். "அது நீ கேட்டது போல் தான்'' என்று அவன் கூறினான்.
பிறகு அல்லாஹ் நாடியவரை அவர் சுவனத்தில் குடியமர்த்தப்பட்டு, பின்னர் அங்கிருந்து இறக்கப்படுகின்றார். ஆதம் தனக்குள் இதைக் கணக்கிட்டுக் கொண்டே இருந்தார். அவரிடம் மலக்குல் மவ்த் வந்தார். ஆதம் அவரிடம், "நீர் அவசரப்பட்டு வந்து விட்டீர். எனக்கு ஆயிரம் வருடங்கள் எழுதப்பட்டிருக்கின்றது'' என்று கூறினார். அதற்கு மலக்குல் மவ்த், "சரிதான். ஆனால் உம்முடைய மகன் தாவூதுக்கு நீர் அறுபது வயதைக் கொடுத்து விட்டீர்'' என்றார். ஆதம் மறுத்தார். அவருடைய சந்ததியும் மறுத்தது. ஆதமும் மறந்தார். அவருடைய சந்ததியும் மறந்தது. அன்றிலிருந்து தான், எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டு விட்டது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 3290
இந்த ஹதீஸிலிருந்து, அல்லாஹ்வுக்கு இரு கைகள் இருக்கின்றன; அவ்விரண்டும் பாக்கியமிக்கவை என்பதை அறிந்து கொள்கிறோம்.

 

பிடிக்கும் புனிதக் கை:


"பூமி முழுவதிலிருந்தும் தான் அள்ளிய கைப்பிடி மண்ணிலிருந்து அல்லாஹுத் தஆலா ஆதமைப் படைத்தான். அதனால் தான் மண்ணின் தரத்திற்கு ஏற்ப ஆதமின் மக்கள் வந்து விட்டனர். சிவப்பர், வெள்ளையர், கருப்பர், இந்நிறங்களுக்கு இடைப்பட்டவர்கள், மென்மையானவர், கடினமானவர், கெட்ட குணமிக்கவர், நல்ல குணமிக்கவர் போன்றோர் அவர்களிலிருந்து வந்து விட்டனர்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி (ரலி)
நூல்: திர்மிதீ 2879

 

கண்ணிய நாயனின் கை விரல்கள்:


அல்லாஹ்வுக்குக் கை இருக்கின்றது என்று சொல்லும் போது அதற்கு, அதிகாரம், ஆற்றல், ஆட்சி, ஆதிக்கம் என்று சிலர் மாற்று விளக்கம் கொடுக்கின்றனர். அவர்களது கருத்தை முறியடிக்கும் விதமாகப் பின்வரும் ஹதீஸ்கள் அமைகின்றனர்....
யூத மத அறிஞர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "முஹம்மதே!' அல்லது "அபுல் காசிமே!' என்றழைத்து, "அல்லாஹ் மறுமை நாளில் வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், மலைகள் மற்றும் மரங்களை ஒரு விரல் மீதும், தண்ணீர் மற்றும் ஈர மண்ணை ஒரு விரல் மீதும், இதர படைப்பினங்கள் அனைத்தையும் ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு அவற்றை அசைத்தவாறே, "நானே அரசன்; நானே அரசன்' என்று சொல்வான்'' என்றார்.
அவர் கூறியதைக் கேட்டு வியப்படைந்து அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.
பிறகு "அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப் பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்'' (39:67) எனும் வசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் 4992
இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் கையில் ஐந்து விரல்கள் என்று தெளிவுபடுத்துகின்றன.

 

வான்மறை கூறும் வலது கை:


அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப் பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்.
அல்குர்ஆன் 39:67
இது அர்ரஹ்மானின் வலது கை குறித்து திருக்குர்ஆனில் இடம் பெறும் ஆதாரமாகும். இது குறித்து ஹதீஸில் இடம் பெறுவதைப் பார்ப்போம்.

 

வலது கையில் வானத்தைச் சுருட்டுதல்:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும் உயர்வுமிக்க அல்லாஹ், மறுமை நாளில் பூமியைத் தனது கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தனது வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு "நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?'' என்று கேட்பான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: புகாரி 6519, முஸ்லிம் 4994

 

இடது கையால் பூமியைச் சுருட்டுதல்:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் வானங்களைச் சுருட்டுவான். பிறகு அவற்றைத் தனது வலக் கரத்தில் எடுத்துக் கொள்வான். பிறகு "நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?'' என்று கேட்பான். பிறகு பூமிகளைத் தனது இடக் கரத்தில் சுருட்டிக் கொள்வான். பிறகு "நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?'' என்று கேட்பான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4995

 

விரல்களைப் பொத்தி விரித்தல்:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தன் வானங்களையும் பூமிகளையும் தன்னுடைய இரு கரங்களிலும் எடுத்துக்கொண்டு, "நானே அல்லாஹ். நானே அரசன்'' என்று கூறுவான் என்றார்கள். இதைக் கூறிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் விரல்களை மடக்கிவிட்டு, பிறகு அவற்றை விரித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4996.
மேற்கண்ட ஹதீஸில், "கைகளால் பிடிப்பான்' என்பதற்கு மக்கள் வேறு அர்த்தம் கொள்ள முடியாத வகையில் நபி (ஸல்) அவர்கள் தமது கைகளால் மூடித் திறந்து காட்டி நேரடிப் பொருள் கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

 

அர்ரஹ்மானின் வலது புறம்:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 


நேர்மையான ஆட்சியாளர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப் பக்கத்தில் ஒளியாலான மேடைகளில் இருப்பார்கள். அவனுடைய இரு கைகளுமே வலக் கரமே (வளமிக்கதே). அவர்கள் தமது நிர்வாகத்திலும், குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக் கொண்ட (அனைத்)திலும் நியாயமாக நடந்து கொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்).
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) 
நூல்: முஸ்லிம் 3406.
ஆதிக்கம் செலுத்துபவன் தன்னுடைய வானங்களையும் தன்னுடைய பூமியையும் தனது கையில் எடுத்து, அதைத் தனது கையில் பிடித்துக் கொண்டு அதைப் பொத்தி விரிப்பான். பிறகு, "நான் ஆதிக்கம் செலுத்துபவன்; ஆதிக்கம் செலுத்துபவர்கள் எங்கே? பெருமையடிப்பவர்கள் எங்கே?'' என்று கேட்பான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹ் எவ்வாறு கேட்பான் என்பதை விளக்கும் விதமாகத்) தமது வலப்பக்கமும் இடப் பக்கமும் சாய்பவர்களாக இருந்தனர். நான் மிம்பரைப் பார்த்தேன். அது நபி (ஸல்) அவர்களுடன் சாய்ந்து கீழே சரிந்து விழுந்து விடுமோ என்று நான் கூறுமளவுக்கு அதன் அடிப்பாகத்திலிருந்து அது அசைந்து கொண்டிருந்தது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: இப்னுமாஜா 194.

 

புரோட்டா போல் புரளும் பூமி:


நபி (ஸல்) அவர்கள் "மறுமை நாüல் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்கüல் ஒருவர் தமது ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த(இறை)வன் பூமியைத் தனது கரத்தால் புரட்டிப் போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்குத் தங்குமிடமாக்குவான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 6520.
இவை அனைத்தும் அல்லாஹ்வுக்குக் கைகள் இருப்பதையும் அவற்றை அவன் பொத்தி விரிப்பதையும் விளக்கமாகக் குறிப்பிடுகின்றன.

 

இறைவன் எழுதிய இனிய வேதம்:


"மூஸாவே! எனது தூதுச் செய்திகள் மூலமும், நான் பேசியதன் மூலமும் மக்களை விட உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே நான் உமக்குக் கொடுத்ததைப் பிடித்துக் கொள்வீராக! நன்றி செலுத்துபவராக ஆவீராக!'' என்று (இறைவன்) கூறினான்.
பலகைகளில் அவருக்காக ஒவ்வொரு விஷயத்தையும் எழுதினோம். அறிவுரையாகவும், அனைத்து விஷயங்களுக்கும் விளக்கமாகவும் அது இருந்தது. "இதைப் பலமாகப் பிடிப்பீராக! இதை மிக அழகிய முறையில் பிடிக்குமாறு உமது சமுதாயத்திற்கும் கட்டளையிடுவீராக! குற்றம் புரிந்தோரின் இல்லத்தை உங்களுக்குக் காட்டுவேன்'' (என்று இறைவன் கூறினான்.)
நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டிருப்பவர்களை எனது சான்றுகளை விட்டும் திருப்புவேன். அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள். நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள மாட்டார்கள். வழி கேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள். அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியதும், அவற்றை அலட்சியப் படுத்தியதும் இதற்குக் காரணம்.
அல்குர்ஆன் 7:144-146,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 


 ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்து கொண்டார்கள்.  மூசா (அலை) அவர்கள், "ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள்'' என்று சொன்னார்கள்.
அதற்கு மூசாவிடம் ஆதம் (அலை) அவர்கள், "நீர் தான் மூசாவா? அல்லாஹ், தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தனது கையால் உமக்காக (வேதத்தை) எழுதினான். (இத்தகைய) நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என்மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?'' என்று கேட்டார்கள்.
(இந்த பதில் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள்; தோற்கடித்து விட்டார்கள்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: முஸ்லிம் 4793

 

அள்ளுகின்ற அல்லாஹ்வின் கை:


"கேள்வி கணக்கில்லாமல் எனது உம்மத்தினரில் எழுபதாயிரம் பேர்களை சுவனத்தில் நுழைவிப்பதை கண்ணியமும் மகத்துவமும் நிறைந்த அல்லாஹ் எனக்கு வாக்களித்துள்ளான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் மீது ஆணையாக, உங்களுடைய உம்மத்தில் அந்த எண்ணிக்கையினர் ஈக்களில் ஒரு செம்மஞ்சள் நிற ஈயைப் போல் தானே இருப்பார்கள்?'' என்று யஸீத் பின் அல்அக்னஸ் அஸ்ஸலமீ கேட்டதற்கு, "ஒவ்வொரு ஆயிரத்துடனும் எழுபதாயிரம் சேர்த்து, ஓர் எழுபதாயிரத்தை எனக்கு வாக்களித்துள்ளான். மேலும் மூன்று கை அள்ளல்களை அதிகப்படுத்தினான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
நூல்: முஸ்னத் அஹ்மத் 22210

 

உயர்ந்தவனின் உள்ளங்கை:


ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (நல்ல மற்றும் கெட்ட) காரியங்கள் (இப்போது தான்) துவங்கப்படுகின்றனவா? அல்லது (ஏற்கனவே) விதி விதிக்கப்பட்டு விட்டதா?'' என்று கேட்டார்.
"அல்லாஹுத் தஆலா ஆதமுடைய மக்களின் சந்ததியினரை அவர்களுடைய முதுகளிலிருந்து எடுத்து அவர்களையே அவர்கள் மீது சாட்சியாக்கினான். பிறகு தன் இரு உள்ளங்கைகளில் கொட்டி, "இவர்கள் சுவர்க்கத்திற்குரியவர்கள், இவர்கள் நரகத்திற்குரியவர்கள்' என்று கூறினான். எனவே சுவனத்திற்குரியவர், சுவனத்திற்குரிய காரியத்திற்கு ஏற்ப எளிதாக இழுத்துச் செல்லப்படுகிறார். நரகத்திற்குரியவர்கள் நரகத்திற்குரிய காரியத்திற்கு ஏற்ப எளிதாக இழுத்துச் செல்லப்படுகிறார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
நூல்: பைஹகீயின் அஸ்மா வஸ்ஸிபாத் 2/148

 தொடரும் .... இறைவன் நாடினால் ....